கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் அதிதீவிர போலீஸ் படையினர் ஆய்வு


கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில்  அதிதீவிர போலீஸ் படையினர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Jan 2022 7:55 PM GMT (Updated: 2022-01-30T01:25:08+05:30)

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்து அதிதீவிர சிறப்பு போலீஸ் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கும்பகோணம்:
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்து அதிதீவிர சிறப்பு போலீஸ் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு கூட்டம் 
தமிழ்நாடு அதி தீவிர போலீஸ் படையின் ஆய்வு கூட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். அதிதீவிர போலீஸ் படையின் துணை கமாண்டோக்கள் வேலு, சோலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அதிதீவிர போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக டி.ஐ.ஜி. சைலேந்திரபாபு தலைமையில் செயல்பட்டு வரும் இந்த அதிதீவிர போலீஸ் படையினர் தமிழகத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களில் அவசர காலங்களில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், வியூகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
தமிழகம் முழுவதும் 148 கோவில்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோவில்களில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முக்கிய விருந்தினர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். எனவே இந்த கோவில்களில் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகிறது. முக்கியமாக திடீர் அசம்பாவிதங்கள், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் போன்ற இக்கட்டான சூழலில் கையாள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வகுக்க வேண்டிய வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து முறையாக ஆய்வு செய்து தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தயார் செய்ய உள்ளோம். 
அதிகாரிகளுடன் ஆலோசனை 
அதன்படி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இந்த ஆய்வு பணியை நேற்று நடத்தியுள்ளோம். இதில் கோவிலின் அமைப்பு கோவிலில் உள்ள நுழைவாயில்கள் எண்ணிக்கை, திறந்திருக்கும் நேரம், கோவிலில் தினசரி நடைபெறும் பூஜைகள் குறித்த விவரம், அன்றாட நடவடிக்கைகள், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை, வேலைநேரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 
மேலும் இந்த கோவிலுக்கு திடீர் அச்சுறுத்தல் ஏதேனும் வந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் என்னென்ன உள்ளன? என்னென்ன வியூகங்கள் வகுக்கலாம்?  உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
இவ்வாறு பேசினார்.

Next Story