தூத்துக்குடி மாநகராட்சி பகுதி வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சி பகுதி வாக்குச்சாவடிகளில்  தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ ஆய்வு
x
தினத்தந்தி 30 Jan 2022 11:22 AM GMT (Updated: 2022-01-30T16:52:10+05:30)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்று மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான சாருஸ்ரீ நேற்று நேரில் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான சாருஸ்ரீ நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடக்கிறது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கிறது. மாநகராட்சி பகுதியில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 763 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 64 ஆயிரத்து 570 பெண் வாக்காளர்கள் ஆக மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 388 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாநகராட்சி பகுதியில் 319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆய்வு
இந்த வாக்குச்சாவடிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளதா, தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்தும் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான சாருஸ்ரீ நேற்று காலையில் ஆய்வு மேற்கொண்டார். அவர் தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி, தங்கம்மாள் நடுநிலைப்பள்ளி, தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சக்திவிநாயகர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் கல்லூரி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி, சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிக்கூடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.
அப்போது வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்வதற்கு வசதியாக சாய்தளம் உள்ளதா?, மின் இணைப்பு, காற்றோட்டம் மற்றும் பாதுகாப்பான கட்டிட வசதிகள், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். அதே போன்று வாக்குசாவடி எண்கள் எழுதும் பணிகளையும் பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் சேகர், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர்கள் பிரின்ஸ், ஆறுமுகம், நிர்வாக அலுவலர் தனசிங், இளநிலை பொறியாளர் நாகராஜன், சுகாதார அலுவலர் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story