மாநகராட்சி தேர்தலையொட்டி கடலூரில் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்


மாநகராட்சி தேர்தலையொட்டி கடலூரில் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 30 Jan 2022 3:50 PM GMT (Updated: 2022-01-30T21:20:23+05:30)

மாநகராட்சி தேர்தலையொட்டி கடலூரில் கட்சி கொடிக்கம்பங்களை அதிகாரிகள் அகற்றினர்.

கடலூர், 

கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், 45 வார்டுகளை கொண்ட மாநகராட்சிக்கு இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வார்டு பங்கீடு பணிகளை அரசியல் கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். மாநகராட்சி மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் முதல் மாநகராட்சி பெண் மேயர் பதவியை பிடிப்பது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் எழுதிய சுவர் விளம்பரங்களையும் அதிகாரிகள் அழித்து வருகின்றனர்.

கொடிக்கம்பங்கள் அகற்றம்

ஆனால் அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி பகுதியில் உள்ள கொடிக்கம்பங்களை நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி தலைமையிலான அலுவலர்கள், ஊழியர்கள் ஆல்பேட்டை, வண்ணாரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கிருந்த அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றினர். சில கொடிக்கம்பங்களை கட்சியினரே துணியால் மறைத்து வைத்திருந்ததையும் பார்க்க முடிந்தது.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படையினரும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story