திட்டக்குடி நகராட்சியை முதல்முறையாக கைப்பற்றப்போவது யார்?


திட்டக்குடி நகராட்சியை முதல்முறையாக கைப்பற்றப்போவது யார்?
x
தினத்தந்தி 30 Jan 2022 3:54 PM GMT (Updated: 30 Jan 2022 3:54 PM GMT)

திட்டக்குடி நகராட்சியை முதல்முறையாக கைப்பற்றப்போகும் அரசியல் கட்சியினா் யார்? என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திட்டக்குடி,

கடலூர் மாவட்டத்திலேயே திட்டக்குடி நகராட்சி தான் மிகவும் பின் தங்கிய நகராட்சியாக உள்ளது. கடந்த 1969-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி திட்டக்குடி இரண்டாம் நிலை பேரூராட்சியாக உருவானது. பின்னர் 1981-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து 1982-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி தேர்வுநிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

அடிப்படை வசதிகள் இல்லை

இதையடுத்து 2009-2010-ம் ஆண்டில் திட்டக்குடி பஸ் நிலையத்தின் பின்புறம் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. திட்டக்குடி பேரூராட்சியில் இளமங்கலம், வதிஷ்டபுரம், கோழியூர், தர்மகுடிக்காடு ஆகிய கிராமங்கள் இணைந்து மொத்தம் 18 வார்டுகளாக இருந்தது.
இந்நிலையில் தற்போது தி.மு.க. ஆட்சியில், இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று திட்டக்குடி பேரூராட்சி கடந்த ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி திட்டக்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் நகராட்சிக்கான எந்தவொரு அடிப்படை வசதிகளும் திட்டக்குடியில் இல்லை.

19 ஆயிரம் வாக்காளர்கள்

இதற்கிடையே திட்டக்குடி நகராட்சியில் உள்ள வார்டுகள் அனைத்தும் மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில் 24 வார்டுகள் உள்ளன. இங்கு  22 ஆயிரத்து 894 பேர் வசித்து வருகின்றனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9,315 பேரும், பெண் வாக்காளர்கள் 9,958 பேரும் என மொத்தம் 19 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதியாக நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி மன்ற தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த நீதிமன்னன் இருந்து வந்தார். அதன் பிறகு தேர்தல் நடைபெறாததால், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கண்காணிப்பில் செயல்பட்டு வந்தது. தற்போது தரம் உயர்த்தப்பட்ட திட்டக்குடி நகராட்சியின் ஆணையாளராக ஆண்டவர் உள்ளார். மேலும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராகவும் திட்டக்குடியை சேர்ந்த சி.வெ.கணேசன் இருந்து வருகிறார். 

நவீன வசதி

திட்டக்குடி நகராட்சி பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். வெலிங்டன் நீர்த்தேக்கத்தை தூர்வாரி கரையை சீரமைத்து சிமெண்டு தளமாக மேம்படுத்த வேண்டும். திட்டக்குடி அரசு மருத்துவமனையை மகப்பேறு மருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும். ஏதேனும் விபத்து ஏற்பட்டால் கடலூர் அல்லது பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்காக செல்ல வேண்டிய நிலையை மாற்றி, 24 மணி நேரமும் இயங்க கூடிய நவீன வசதிகளுடன் கூடிய உயர் சிகிச்சை மையம் திட்டக்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைக்க வேண்டும்.

திட்டக்குடியில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். நகராட்சியில் சுகாதார வளாகம், கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற பாதாள சாக்கடை வசதி திட்டம், நகராட்சி பஸ் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்டவை இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 

வேலை தேடி

கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியாக உள்ள திட்டக்குடி நகராட்சியில் வசிக்கும் படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்காக எந்தவொரு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வேலை தேடி பிழைப்புக்காக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்வதால், நகராட்சி வளர்ச்சி அடையாமல் மிகவும் பின்தங்கியே உள்ளது. விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் திட்டக்குடியில் தொழிற்சாலைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் முறையாக சென்றடைவதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
  திட்டக்குடி நகராட்சியாக மாற்றப்பட்டு முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கப்போவதால், நகராட்சியை யாா் கைப்பற்றுவார்கள் என்று பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Next Story