தண்ணீர் தேங்கிய வயல்களில் கதிர் அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் அவதி


தண்ணீர் தேங்கிய வயல்களில் கதிர் அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 30 Jan 2022 5:01 PM GMT (Updated: 30 Jan 2022 5:01 PM GMT)

திருவாடானை தாலுகாவில் தண்ணீர் தேங்கிய வயல்களில் கதிர் அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொண்டி, 
திருவாடானை தாலுகாவில் தண்ணீர் தேங்கிய வயல்களில் கதிர் அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கனமழை
திருவாடானை தாலுகா மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இந்த தாலுகாவில் இந்த ஆண்டு விவசாயிகள் விவசாய பணிகள் தொடங்கும் நேரத்தில் கனமழை பெய்ததன் காரணமாக விதைப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் காலதாமதமாக விதைப்பு நடைபெற்றது. தொடர்ந்து பெய்த மழையினால் கண்மாய்கள் நிரம்பின. 
மேலும் கண்மாய் நீர் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் தேங்கியது. வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியாமல் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர். 
சிரமம்
தற்போது இந்தபகுதியில் கதிர் அறுவடை தீவிரமாக நடை பெற்று வரும் நிலையில் விவசாயிகள் தண்ணீர் தேங்கிய வயல்களில் இருந்து எஞ்சிய நெற்கதிர்களை வீட்டிற்கு கொண்டு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். 
பல பகுதி களையும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் எந்திரங்கள் மூலம் கதிரை அறுவடை செய்ய முடியாத நிலையில் நெடுந்தூரம் உள்ள வயல்களில் இருந்து அறுவடை செய்து தலைச் சுமையாக அருகில் உள்ள சாலைகளுக்கு கொண்டு குவித்து வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து நெற்கதிரை சாலைகளில் உளற வைத்து அதன்பின்னர் கதிரடிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 
இழப்பீடு
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தண்ணீர் தேங்கி நெற்கதிர் அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதில் எஞ்சிய நெற்கதிரை அறுவடை செய்து விற்க சென்றால் ஈரப்பதம் உள்ளது என கூறி வியாபாரிகள் நெல்லை வாங்க மறுக்கின் றனர். இதை காயவைத்து பாதுகாப்பதில் பெரும் சிரமம் உள்ளது. இதனால் வியாபாரிகள் பாதி விலைக்கு கேட்கின் றனர். வேறு வழியின்றி விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டு உள்ளோம். விவசாயிகளின் நலன்கருதி அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். 

Next Story