ரசாயன பொடி தூவி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


ரசாயன பொடி தூவி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2022 9:00 PM GMT (Updated: 30 Jan 2022 9:00 PM GMT)

ரசாயன பொடி தூவி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

செந்துறை:

தாலிச்சங்கிலி பறிப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து உடையார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இரும்புலிக்குறிச்சி, பரணம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக நில அளவையர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பலரிடம் ரசாயன பொடி தூவி கொள்ளை அடிக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர். பெண்களிடம் தங்களது துப்பட்டா, சேலை வண்டியில் சிக்கியுள்ளது என்று கூறி 2 வாலிபர்கள் நூதன முறையில் ரசாயன பொடி தூவி கொள்ளையடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செந்துறையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் பழனியம்மாள்(வயது 50) என்பவர் செந்துறையில் இருந்து தனது ஸ்கூட்டரில் சொந்த ஊரான நல்லாம்பாளையம் கிராமத்தை நோக்கி சமத்துவபுரம் அருகே சென்றார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் பழனியம்மாளிடம், அவரது சேலை வண்டியில் சிக்கியதாக கூறி, ரசாயன பொடி தூவி அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்றனர்.
2 வாலிபர்கள் சிக்கினர்
இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் உத்தரவின்பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி, இரும்புலிக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இந்த பகுதியில் கண்காணித்து வந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை அடையாளம் கண்டு தேடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை இரும்புலிக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் செந்துறை அருகே உள்ள பூமுடையான்குடிக்காடு மாரியம்மன் கோவில் ெதருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 27), அய்யனார்கோவில் தெருவை  சேர்ந்த ராஜேஷ்(24) என்பதும், அவர்கள் கடந்த ஒரு வாரமாக வழிப்பறியில் ஈடுபட்டதோடு, சில மாதங்களுக்கு முன்பு பொன்பரப்பி, ஆனந்தவாடி ஆகிய கிராமங்களில் பெண்களிடம் நகைகள் பறித்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழிப்பறி சம்பவத்தின்போது பெண்களின் மீது சோளமாவை தூவியதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைது
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 17 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களை இரும்புலிக்குறிச்சி போலீசார் கைது செய்து, செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். கடந்த ஒரு வாரமாக செந்துறை பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் சிக்கியது அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story