வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா- வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்


வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா- வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்
x
தினத்தந்தி 30 Jan 2022 9:15 PM GMT (Updated: 2022-01-31T02:45:22+05:30)

தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா உறுதியானது. அவர் ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

ஈரோடு
தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா உறுதியானது. அவர் ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
அமைச்சர்
தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். அவர் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். தினமும் அதிகாரிகளை சந்தித்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் நிலவரம், ஆஸ்பத்திரியில் உள்ள படுக்கை வசதி உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து வந்தார். மேலும் கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.
கடந்த சில நாட்களாக பல்வேறு அரசு திட்ட விழாக்களிலும் அவர் கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பாளர்களை தேர்வு செய்தல், கூட்டணி கட்சிகளிடையே வார்டுகளை பிரித்து வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல் போன்ற கட்சி பணிகளிலும் அவர் ஆர்வம் காட்டி வந்தார்.
கொரோனா உறுதி
இந்தநிலையில் நேற்று முன்தினம் அமைச்சர் சு.முத்துசாமிக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் டாக்டரிடம் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனை முடிவு நேற்று காலை வந்தது. அதில் அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து டாக்டரின் ஆலோசனையின் பேரில் அவர் ஈரோடு பெரியார்நகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். தினமும் காலையில் அமைச்சர் முத்துசாமி கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிவது வழக்கம். ஆனால் அமைச்சருக்கு நேற்று தொற்று உறுதியானதால் அவருடைய வீட்டிற்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் வீட்டின் முன்பக்க கதவு அடைக்கப்பட்டு இருந்தது. அமைச்சருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அமைச்சர் முத்துசாமி கேட்டுக்கொண்டார். அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே 2 தவணை கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story