டி.என்.பாளையம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள், ஒரு கோழி பலி


டி.என்.பாளையம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள், ஒரு கோழி பலி
x
தினத்தந்தி 30 Jan 2022 9:15 PM GMT (Updated: 30 Jan 2022 9:15 PM GMT)

டி.என்.பாளையம் அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள், ஒரு கோழி பலியானது.

டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள், ஒரு கோழி பலியானது.
மர்மவிலங்கு
டி.என்.பாளையம் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுப் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் ஆடுகள் மற்றும் கோழியை வளர்த்து வந்தார். வழக்கம் போல் ஆடுகள், கோழியை நேற்று முன்தினம் பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலையில் அவர் எழுந்து பார்த்தபோது 4 ஆடுகள் ஏதோ மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் செத்து கிடந்தன. இதில் ஒரு ஆடு குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்தது. மேலும் ஒரு கோழியும் செத்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். 
தெருநாய்கள்
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து அங்கு பதிவான கால் தடங்களை ஆய்வு செய்தனர். இதில் ஆடுகள் மற்றும் கோழியை சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் தாக்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் தெரு நாய்கள் தான் பட்டிக்குள் புகுந்து ஆடுகள் மற்றும் கோழியை கடித்து குதறி இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் இல்லை, ஆதலால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். 
பீதி 
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் பலர் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகிறோம். ஆனால் இரவு நேரங்களில் தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து கால்நடைகளை கடித்து குதறுகிறது. இது எங்களுக்கு பீதியை ஏற்படுத்துகிறது. இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்’ என்றனர்.

Next Story