லாரி-மொபட் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாவு


லாரி-மொபட் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாவு
x
தினத்தந்தி 31 Jan 2022 12:18 AM GMT (Updated: 2022-01-31T05:48:52+05:30)

மண்ணிவாக்கம் அருகே லாரி-மொபட் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன், மகள் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே உள்ள நாகல்கேணி பூபதி தெரு காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37). இவருடைய மகன் கிரி (9), மகள் மோனிகா (7). இவர்கள் 3 பேரும் நேற்று இரவு கோவளத்தில் இருந்து மண்ணிவாக்கம் வழியாக மொபட்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மண்ணிவாக்கம் புதுநகர் பகுதி அருகே சென்றபோது, சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மொபட் பயங்கரமாக மோதியது.

3 பேர் பலி

இதில் லாரிக்கு அடியில் ெமாபட் சொருகியபடி நின்றது. இதனால் மொபட்டில் இருந்த கோபிநாத், கிரி மற்றும் மோனிகா ஆகிய 3 பேரும் மொபட்டில் அமர்ந்த நிலையிலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஒட்டேரி போலீசார், பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலையோரமாக லாரியை நிறுத்தி விட்டு சென்ற டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மின்விளக்கு வெளிச்சம் இல்லாத சாலையோர பகுதியில் லாரி நிறுத்தப்பட்டு இருந்ததால், அதை கவனிக்காமல் வேகமாக வந்த மொபட் லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story