களை இழந்தது போச்சம்பள்ளி ஞாயிறு சந்தை


களை இழந்தது போச்சம்பள்ளி ஞாயிறு சந்தை
x
தினத்தந்தி 31 Jan 2022 8:31 AM GMT (Updated: 31 Jan 2022 8:31 AM GMT)

ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டாலும் விற்பனை இல்லாமல் போச்சம்பள்ளி ஞாயிறு சந்தை களை இழந்து காணப்பட்டது. விற்பனை இல்லாமல் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.

மத்தூர்:-
ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டாலும் விற்பனை இல்லாமல் போச்சம்பள்ளி ஞாயிறு சந்தை களை இழந்து காணப்பட்டது. விற்பனை இல்லாமல் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.
போச்சம்பள்ளிஞாயிறு சந்தை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சந்தை கூடுவது வழக்கம். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சந்தையை போன்று போச்சம்பள்ளி சந்தையும் சிறப்புக்குரியது. இங்கு குண்டூசி முதல் குதிரை வரை வாங்கலாம் என்று கூறுவார்கள். தங்கம் விற்பனையும் அமோகமாக நடக்கும். 
அரிசி, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வியாபாரிகள், ஆடு, மாடு, கோழி என கால்நடை வியாபாரிகள், பருப்பு வகை வியாபாரிகள், இறைச்சி வியாபாரிகள் என போச்சம்பள்ளி சந்தையில் சுமார் 400- க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து கடை வைப்பது வழக்கம். 
களை இழந்த சந்தை
இந்த ஞாயிறு சந்தையானது கடந்த சில வாரங்களாக கொரோனா ஊரடங்கால் முடங்கி இருந்தது. ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழு ஊரடங்கு விலக்கப்பட்டதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடியது. வழக்கமாக வரும் வியாபாரிகள் பெரும்பாலானவர்கள் சந்தையில் கடை போடவில்லை. பெண் வியாபாரிகள் மட்டும் அதிக அளவில் சந்தையில் கடை அமைத்து வியாபாரம் செய்தனர்.
இதனால் வழக்கமாக கூட்டமாக காணப்படும் போச்சம்பள்ளி சந்தையானது பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் களை இழந்து காணப்பட்டது. எதிர்பார்த்த வியாபாரம் இல்லாததால் வியாபாரிகளும், விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனர். விவசாயிகள் போதுமான அளவில் வராததால் மொத்த வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story