அம்பலமூலா அரசு பள்ளியில் படித்த 2 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வு


அம்பலமூலா அரசு பள்ளியில் படித்த 2 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வு
x
தினத்தந்தி 31 Jan 2022 1:08 PM GMT (Updated: 2022-01-31T18:38:22+05:30)

அம்பலமூலா அரசு பள்ளியில் படித்த 2 பேர், 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளனர்.

பந்தலூர்

அம்பலமூலா அரசு பள்ளியில் படித்த 2 பேர், 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளனர்.

தரவரிசை பட்டியல்

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் கடந்த ஆண்டு முதல் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. 

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. அதன்படி மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டன. இதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடந்தது.

மருத்துவ படிப்புக்கு தேர்வு

இதில், 342-வது இடம் பிடித்து அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மனோகர் நிதின் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளார். இவரது தந்தை பிரகாசன், தாயார் அனிதா. 

இவர்களது சொந்த ஊர், அய்யன்கொல்லி அருகே உள்ள மஞ்சள்மூலா ஆகும். கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்று இருந்தாலும் முன்னுரிமை கிடைக்காமல் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் 2021-22-ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்று உள்இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளார்.

மாணவி அனகா

இதேபோன்று அதே பள்ளியை சேர்ந்த மாணவி அனகா 543-வது இடம் பிடித்து பல் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளார். இவரது தந்தை பாலசந்திரன், தாயார் பிரதீபா ஆவர். இவர்கள் அய்யன்கொல்லி அருகே பரிவாரம் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

 மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் சரிவர மின்சாரம் மற்றும் இணையதள வசதி இல்லாத கிராமங்களில் வாழ்ந்தாலும், தொடர் முயற்சியால் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ள மனோகர் நிதின், அனகா ஆகியோரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story