காட்டுத்தீயில் 3 ஏக்கர் புல்வெளி கருகியது


காட்டுத்தீயில் 3 ஏக்கர் புல்வெளி கருகியது
x
தினத்தந்தி 31 Jan 2022 1:08 PM GMT (Updated: 2022-01-31T18:38:40+05:30)

கூடலூர் அருகே காட்டுத்தீயில் 3 ஏக்கர் புல்வெளி கருகியது. தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

கூடலூர்

கூடலூர் அருகே காட்டுத்தீயில் 3 ஏக்கர் புல்வெளி கருகியது. தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

காட்டுத்தீ பரவியது

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் கோடைகால வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் புற்கள் காய்ந்து வருகிறது. மேலும் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கூடலூர் அருகே நாடுகாணி வனச்சரகத்துக்கு உட்பட்ட மரப்பாலம் பகுதியில்  திடீரென காட்டுத்தீ பரவியது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே வனக்காப்பாளர் அனீஸ் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புல்வெளி கருகியது

ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. இதனால் வனத்துறையினர் பல்வேறு சிரமங்களுக்கு இடையே ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான புல்வெளி தீயில் கருகியது. மேலும் குருவிகள் உள்ளிட்ட சிறு வன உயிரினங்கள் செத்தன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால், வனப்பகுதியில் புற்கள் காய்ந்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் மட்டுமின்றி கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுபோன்ற நிலையில் சமூக விரோதிகள் புல்வெளிகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இது வன சட்டத்தின்படி குற்றம். எனவே வனப்பகுதியை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story