மேம்பாலம் கட்டித்தரக்கோரி 14 கிராம மக்கள் மறியல்


மேம்பாலம் கட்டித்தரக்கோரி 14 கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 31 Jan 2022 2:07 PM GMT (Updated: 2022-01-31T19:37:22+05:30)

நத்தம்-துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலையின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தரக்கோரி 14 கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நத்தம்:

 நான்கு வழிச்சாலையில் மேம்பாலம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருந்து திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை, நத்தம் அருகே வேலம்பட்டி ஊராட்சியில் உள்ள சேர்வீடு கிராமத்தின் வழியாக செல்கிறது. 

இந்தநிலையில் சேர்வீடு மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள், தாங்கள் பாதுகாப்பாக வாகனங்களில் சென்று வர நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு மாறாக அங்கு சிறிய பாலம் கட்டப்பட இருப்பதாக தெரிகிறது.

கிராம மக்கள் மறியல்

இதையடுத்து நேற்று சேர்வீடு, துவராபதி, ஆத்திப்பட்டி, புதுப்பட்டி, குட்டூர் உள்ளிட்ட 14 கிராமங்களை சேர்ந்த மக்கள், நத்தம்-துவரங்குறிச்சி செல்லும் நான்கு வழிச்சாலையில் திரண்டு வந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வருகிற 24-ந்தேதி நத்தம் தாலுகா அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புதிய மேம்பாலம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story