முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு


முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
x
தினத்தந்தி 31 Jan 2022 2:41 PM GMT (Updated: 2022-01-31T20:11:53+05:30)

தை அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

முருகபவனம்:

முன்னோர்களுக்கு தர்ப்பணம் 

ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்நாளில் இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கம். 

அதன்படி தை அமாவாசை நாளான நேற்று திண்டுக்கல்லில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதையொட்டி திண்டுக்கல் கோபால சமுத்திரம் மற்றும் ஆர்.எம்.காலனியில் உள்ள ஈமக்கிரியை செய்யும் இடம் ஆகியவற்றில் தர்ப்பண வழிபாடுகள் நடைபெற்றன. 

காலை 6 மணி முதல் தர்ப்பணம் கொடுப்பவர்கள் அங்கு வரத்தொடங்கினர். அவ்வாறு வந்தவர்கள் வரிசையாக தரையில் அமர்ந்து வாழை இலையில் பச்சரிசி, காய்கறிகள், தேங்காய், பழம் உள்பட தர்ப்பணம் பொருட்களை எடுத்து வைத்தனர்.

 கற்பூரம் ஏற்றி வழிபாடு 

அதன்பிறகு புரோகிதர்கள் வேத மந்திரங்களை கூற அதை உடன் சொல்லி எள், தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுத்தனர். பிறகு கற்பூரம் ஏற்றி இறந்த தங்களது முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். 

அதைத்தொடர்ந்து அங்கிருந்து சிறிதளவு பச்சரிசியை வீட்டுக்கு எடுத்து சென்று சமையலில் சேர்த்து படையலிட்டு விரதத்தை நிறைவு செய்தனர். பிறகு அன்னதானம் செய்தும், ஒரு சிலர் பசுவுக்கு அகத்திக்கீரையும் வாங்கி உண்ண கொடுத்தனர்.

இதேபோல் பழனி சண்முகநதி கரையில் தர்ப்பணம் செய்ய அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அங்கு வாழை இலையில் தேங்காய், பழம், பச்சரிசி, காய்கறி, பூக்கள், அரிசி, எள் ஆகியவற்றை படைத்து புரோகிதர் மந்திரங்கள் கூற தர்ப்பணம் செய்தனர். 

பின்னர் ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். தை அமாவாசையையொட்டி தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. 

Next Story