ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:06 PM GMT (Updated: 2022-01-31T21:36:16+05:30)

ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மொட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட ராமச்சந்திராபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ராமச்சந்திராபுரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் அவர்கள் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ராமச்சந்திராபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள், போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது ராமச்சந்திராபுரம் கிராமத்திற்கு சீராக குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story