கங்கைகொண்டான் பேரூராட்சியை கைப்பற்றப்போவது யார்?


கங்கைகொண்டான் பேரூராட்சியை கைப்பற்றப்போவது யார்?
x
தினத்தந்தி 31 Jan 2022 4:57 PM GMT (Updated: 2022-01-31T22:27:21+05:30)

கங்கைகொண்டான் பேரூராட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பது அரசியல் கட்சியினா் மத்தியில் ஆா்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

மந்தாரக்குப்பம்,

மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேரூராட்சி கடந்த 1977-ம் ஆண்டு முதல் நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. அதன் பின் 1998-ம் ஆண்டு முதல் தேர்வு நிலை பேரூராட்சியாக உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

8 ஆயிரம் வாக்காளர்கள்

கங்கைகொண்டான் பேரூராட்சியில் உள்ள வார்டுகளை மறுவரை செய்ததன் அடிப்படையில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் ஆண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 99 பேரும், பெண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 19 பேரும் என மொத்தம் 8 ஆயிரத்து 118 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை நடைபெற்ற பேரூராட்சி தேர்தலில் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த மனோகர், துணைத்தலைவராக ராஜ்மோகன் ஆகியோர் இருந்தனர்.  பேரூராட்சியில் 15-வது வார்டு ஆதிதிராவிடர் பெண் போட்டியிடவும், 2, 3, 4, 7, 9, 13, 14 ஆகிய வார்டுகளில் பெண்கள் போட்டியிடவும் மற்ற வார்டுகளில் பொதுவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

கங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தை  பொறுத்தவரையில் இதன் அருகிலேயே வட்டார மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலகம், என்.எல்.சி. பொது மருத்துவமனை, சார்பு நீதிமன்றம், கடலூர் மாவட்ட நில எடுப்பு அலுவலகம், போலீஸ் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. 

சுத்தமான குடிநீர்

பேரூராட்சிக்கு அருகில் என்.எல்.சி.க்கு தேவையான நிலக்கரி எடுப்பதற்கு வெடி வைக்கப்படுவதால், மோட்டார் மூலம் எடுத்து பயன்படுத்தப்படும் நீரானது எப்போதும் மணல் கலந்து வருகிறது. இத்தேர்தலில் வெற்றி பெறுபவர்கள், கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு சுத்தமான குடிநீர் பெற்றுத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தலைவர் பதவி யாருக்கு?

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வைத்தும், அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் போட்டியிடுவதால் தேர்தல் களம் அனல் பறக்கும். 
இந்த தேர்தலில் அதிக வார்டுகளை கைப்பற்றும் கட்சியே பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றும். கங்கைகொண்டான் பேரூராட்சி தலைவர் பதவியை அலங்கரிக்கப்போவது யார்? என்பதை தெரிந்து கொள்ள மக்கள் வருகிற 22-ந் தேதி வரை காத்திருக்க வேண்டும். 

Next Story