வாக்குச்சாவடி அலுவலர்கள் மிக கவனமுடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்


வாக்குச்சாவடி அலுவலர்கள் மிக கவனமுடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:01 PM GMT (Updated: 31 Jan 2022 5:01 PM GMT)

வாக்குச்சாவடி அலுவலர்கள் கவனமுடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படுகின்றன. இதையொட்டி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சிகள் நடைபெற உள்ளது.
அந்த வகையில்  விழுப்புரம் நகராட்சியில் உள்ள 129 வாக்குச்சாவடி  மையங்களில் பணிபுரிய உள்ள 155 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 155 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்-1, 155 வாக்குச்சாவடி நிலை அலுவலர்-3 என மொத்தம் 465 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு  விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் கட்டுப்பாட்டு எந்திரத்தை எவ்வாறு பொருத்துவது, இந்த எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் எவ்வாறு உடனடியாக சரிசெய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் அளித்தனர்.

கலெக்டர் அறிவுரை

இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள் மிக கவனமுடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரியாகவும், முறையாகவும் பயன்படுத்தி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் வகையில் பணிபுரிய வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story