நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாவட்டத்தில் 61 பேர் வேட்பு மனு தாக்கல்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாவட்டத்தில் 61 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 31 Jan 2022 5:03 PM GMT (Updated: 31 Jan 2022 5:03 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 61 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 61 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 28-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்த மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் நடைபெறுவதால் அங்கு உள்ளே செல்பவர்களின் விவரங்களை போலீசார் கேட்டறிந்த பின்னரே அனுமதித்தனர். இதேபோல் 4 நகராட்சி அலுவலகங்கள், 42 பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பு மனுத்தாக்கல் நடந்து வருகிறது.
61 பேர்
கடந்த 28-ந் தேதி யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 29-ந் தேதி பவானி, சத்தியமங்கலம் ஆகிய நகராட்சிகளில் தலா ஒருவரும், காஞ்சிக்கோவில் பேரூராட்சியில் ஒருவரும் என 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை.
இந்தநிலையில் நேற்று மனு தாக்கல் செய்ய பலர் வந்தனர். ஈரோடு மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிகளுக்கு 3 பேரும், நகராட்சிகளில் 25 பேரும், பேரூராட்சிகளில் 33 பேரும் என ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 61 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மாவட்டத்தில் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே வருகிற நாட்களில் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். வருகிற 4-ந் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. மேலும் 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

Next Story