3 புதிய ரோந்து கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன


3 புதிய ரோந்து கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன
x
தினத்தந்தி 31 Jan 2022 5:13 PM GMT (Updated: 31 Jan 2022 5:13 PM GMT)

எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான 3 புதிய ரோந்து கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.

ராமேசுவரம், 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு 3 அதிவேக புதிய ரோந்து கப்பல்கள் உருவாக்கப்பட்டன.
இந்த கப்பல்கள் மேற்கு வங்காளம் செல்வதற்காக அங்கிருந்து புறப்பட்டு வந்தன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் உள்ள ரெயில்வே தூக்குப்பாலத்தை கடப்பதற்காக பாம்பன் தென்கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக 3 கப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் நேற்று காலை 10 மணி அளவில் ரெயில்வே பணியாளர்களால் திறக்கப்பட்டது. தொடர்ந்து புதிய ரோந்து கப்பல் ஒவ்வொன்றும் துறைமுக அதிகாரிகளின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் தூக்குப்பாலத்தை பாதுகாப்பாக கடந்து சென்றன.. 
தூக்குப்பாலத்தை கடந்து சென்ற ஒவ்வொரு கப்பலும் சுமார் 40 மீட்டர் நீளமும், 577 டன் எடையும் கொண்டதாகும். 
அதே நேரத்தில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதிக்கு செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்றும் ஒருசில மீன்பிடி படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன. 
தூக்குப்பாலத்தை ரோந்து கப்பல்கள் கடந்து சென்றதை பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். 

Next Story