850 மூடை கலர் அப்பளத்துடன் அறைக்கு சீல் வைத்த அதிகாரிகள்


850 மூடை கலர் அப்பளத்துடன்  அறைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
x
தினத்தந்தி 31 Jan 2022 6:03 PM GMT (Updated: 31 Jan 2022 6:03 PM GMT)

மதுரையில் உள்ள அப்பள குடோனில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, 850 மூடை கலர் அப்பளத்துடன் அறைக்கு சீல் வைத்தனர்.

மதுரை, 
மதுரையில் உள்ள அப்பள குடோனில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, 850 மூடை கலர் அப்பளத்துடன் அறைக்கு சீல் வைத்தனர். 
அப்பள குடோனில் சோதனை
செயற்கை வண்ணம் பூசப்படும் கலர் அப்பளங்கள் விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இந்த தடையை மீறி அதிகளவில் மதுரையில் கலர் அப்பளம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. எனவே உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் மதுரை தத்தனேரியில் உள்ள ஒரு அப்பள குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 850 மூடை கலர் அப்பளங்கள் இருந்தன. அதன் மொத்த எடை 21 ஆயிரத்து 250 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
இதனைத்தொடர்ந்து செல்லூர் குலமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் விற்பனை நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கும் செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட கலர் அப்பளம் 1,000 கிலோ கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும்.
சீல் வைப்பு
அதன்படி மொத்தம் ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 22 ஆயிரத்து 250 கிலோ அப்பளங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த அப்பளங்கள் அனைத்தும் ஒரு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
அதில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து முடிவுகள் வரும் வரை, கலர் அப்பள மூடைகள் இருக்கும் அறை சீல் வைக்கப்பட்டு இருக்கும். அதற்கான நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு முடிவு வரும் வரை உணவு தயாரிப்பாளர் அதன் பொறுப்பாளராக இருந்து அதனை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story