11 பெருமாள் கருட சேவை


11 பெருமாள் கருட சேவை
x
தினத்தந்தி 31 Jan 2022 6:29 PM GMT (Updated: 2022-01-31T23:59:34+05:30)

நாங்கூரில் நாளை 11 பெருமாள் கருட சேவை நடக்கிறது. இந்த விழாவை குறைவான பக்தர்களை கொண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருவெண்காடு;
நாங்கூரில், நாளை 11 பெருமாள் கருட சேவை நடக்கிறது. இந்த விழாவை குறைவான பக்தர்களை கொண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. 
11 பெருமாள் கருடசேவை 
சீர்காழி அருகே நாங்கூர் கிராமத்தில் நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 11 பெருமாள் கருட சேவை  நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவத்தில் நாங்கூர் பகுதியை சுற்றியுள்ள 11 பெருமாள்கள் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் அனைத்து பெருமாள்களுக்கும் தீபாராதனை நடைபெறும். இதுவே கருடசேவை உற்சவம் என அழைக்கப்படுகிறது. 
ஆயத்த கூட்டம்
இந்த ஆண்டு கருடசேவை உற்சவம் நாளை (புதன்கிழமை) இரவு நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் நாராயண பெருமாள் கோவிலில் நடந்தது. கூட்டத்துக்கு சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமை தாங்கினார். தாசில்தார் சண்முகம், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், கிராம தலைவர் அன்பு, ஊராட்சி தலைவர் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
குறைவான பக்தர்கள் 
கூட்டத்தில், கொரோனா காரணமாக மாவட்ட கலெக்டர் லலிதா அறிவுரையின்படி குறைவான பக்தர்களை கொண்டு கருடசேவை உற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் கூறியதாவது 
தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, அரசு கூறியுள்ள வழிகாட்டுதல்படி கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் உற்சவத்தில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story