‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார்பெட்டிக்கு நன்றி
திருச்சி மாநகராட்சி கூனிபஜார் சவேரியார் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இத்தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
திருச்சி மாவட்டம், தொட்டியம். மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்று வந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
பயிர்களை நாசம் செய்யும் பன்றிகள்
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகிறது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் சகஜமாக சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிராஜா, அரியலூர்.
மின் மோட்டார் அறை சீரமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள குளத்துப்பாளையத்திலிருந்து வேட்டமங்கலம் செல்லும் சாலையின் ஓரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், அதன் அருகே மின் மோட்டார் இயக்கும் அறை கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும், எந்தநேரமும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் மோட்டார் இயக்கும் அறையை சீரமைக்க வேண்டும்.
லலிதா, கரூர்.
குப்பைகள் அகற்றப்படுமா?
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள காட்டுகேணி பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை. இதனால் அப்பகுதியில் குப்பைகள் மலைபோல் தேங்கி நிற்கிறது. ஆடு, பன்றி, நாய்கள் அந்த குப்பைகளை கிளறி விடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூபா, அரியலூர்.
சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் 5 மற்றும் 6-ம் வார்டுகளுக்கு இடையே பிரதான சாலையின் ஒருபுறம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மறுபுறம் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் புகுந்து விடுகிறது. மேலும், அதன் அருகே உள்ள மற்றொரு கால்வாயில் குப்பைகள் தேங்கி இருப்பதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வராஜூ, பெரம்பலூர்.
Related Tags :
Next Story