வேலூர் மாவட்டத்தில்தேர்தல் விதிகளை மீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை. கலெக்டர் தகவல்


வேலூர் மாவட்டத்தில்தேர்தல் விதிகளை மீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை. கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2022 11:30 PM IST (Updated: 4 Feb 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

பறக்கும் படைகள்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் எம்.பிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் கட்சியினரும், பொது மக்களும் முழுஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக மாவட்டத்தில் மொத்தம் 30 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை பணமோ, பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம் இரு இடங்களில் பிடிபட்டன. அவை உரிய ஆய்வுக்கு பிறகு உடனடியாக விடுவிக்கப்பட்டன.

பாரபட்சமின்றி நடவடிக்கை

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெறாமல் தடுக்க அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் பறக்கும்படை குழுவினரை அருகிலுள்ள ஊரக பகுதிகளிலும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தேர்தல் காரணமாக கொரோனா பரிசோதனை குறைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. பொதுவாக மாவட்டத்தில் தினமும் 10 முதல் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட நாட்களிலும், இடையில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நாட்களிலும் தினமும் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பரவல் குறைந்துள்ள போதிலும் தினமும் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் காரணத்துக்காக கொரோனா பரிசோதனை குறைக்கப்படவில்லை.

தேர்தல் விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை என அ.தி.மு.க. புகார் தெரிவித்துள்ளது. இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்களின் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகள் 91-ல் இருந்து 81-ஆக குறைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வெப்கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியில் பறக்கும்படை குழுவினர் உள்பட 3,500 ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பொதுக்கூட்டம்

தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களோ, வேன் பிரசாரமோ நடத்த அனுமதியில்லை. உள் அரங்குகளில் 100 பேருக்கு மிகாமல் கூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம். எனினும், நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது. உரிய வகையில் முன்அனுமதி கோரி விண்ணப்பங்கள் வரும்பட்சத்தில் தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளுக்கு உட்பட்டு நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரத்துக்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
--

Next Story