பள்ளி கட்டிட மேற்கூரை சிலாப் பெயர்ந்து விழுந்து 2 மாணவர்கள் காயம்
மானாமதுரை அருகே பள்ளி கட்டிட மேற்கூரை சிலாப் பெயர்ந்து விழுந்து 2 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சங்கமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றன.
மதிய உணவு இடைவேளையின் போது, அந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிலாப்பில்் ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது. அப்போது அதன் கீழே நின்றிருந்த 1-ம் வகுப்பு மாணவர் நித்திஷ் (வயது 6), மாணவி சுபஸ்ரீ (6) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதில் சிறுவன் நித்திசுக்கு தலையிலும், சிறுமி சுபஸ்ரீக்கு கை மற்றும் கால் பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மானாமதுரை யூனியன் தலைவர் லதாஅண்ணாத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து,, சேதம் அடைந்த நிலையில் இருந்த சிலாப் பகுதி முற்றிலும் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story