உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல்
குமரி மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.17½ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.17 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பறக்கும் படை சோதனை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருள், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதை கண்டறிந்து தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காக குமரி மாவட்டத்தில் 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் வாரியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணம் பறிமுதல்
இந்தநிலையில் நேற்று தக்கலை அருகே முட்டைக்காடு பகுதியில் பறக்கும் படை சிறப்பு அதிகாரி திருப்பதி ராஜா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த காரை கேரள மாநிலம் வெள்ளறடை பகுதியை சேர்ந்த சுதிர் என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 440 இருந்தது தெரிய வந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்களும் இல்லை. இதனை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரூ.17 லட்சம் சிக்கியது
இரணியல் வள்ளி ஆற்றுப்பாலம் அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையின் போது, அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய போது அதில் கட்டு, கட்டாக 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ.13 லட்சம் இருந்தது. பிறகு உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதாக வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவரிடம் இருந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கிங்சிலி கிறிஸ்டோபர், போலீஸ் ஏட்டுகள் ராஜகுமார், சகாய ஜெகதீஸ் ஆகியோர் குளச்சல் அருகே ஆலஞ்சி சந்திப்பில் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது காரில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஞான பிரகாசம் என்பவர் இந்த பணத்தை கொண்டு சென்றதும், உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் ரூ.17½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story