100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தா.பழூர்:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் தேவாமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேவாமங்கலம் ஊராட்சியில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை தரப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் முறைகேடு நடப்பதாகவும், அதனை சரிசெய்ய வேண்டும் என்றும், பணிகள் நடைபெறும் நேரத்தை மாற்றி அமைக்கக் வேண்டும் என்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கையை ஊராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு தேவாமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் நேற்று திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் சிறைபிடிப்பு
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மோதுவது போல் வந்து நின்று உள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆத்திரம் அடைந்து, பஸ்சின் சாவியை பறித்து பஸ்சை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் மற்றும் தா.பழூர் போலீசார் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் போலீசார் பஸ் சாவியை வாங்கி டிரைவரிடம் கொடுத்து சமாதானம் செய்து பஸ்சை அனுப்பி வைத்தனர். மறியல் போராட்டம் காரணமாக அணைக்கரை- சிலால் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story