ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனைக்குட்டம் அணை
விருதுநகருக்கு குடிநீர் ஆதாரமான ஆனைக்குட்டம் அணையில் 7.5 மீட்டர் நீரை தேக்கி வைக்க வாய்ப்புள்ள நிலையில் தற்போதைய நிலையில் 3 மீட்டர் தண்ணீர் இருப்பு உள்ளது. அதுவும் ஷட்டர் பழுதால் தண்ணீர் வெளியேறி விடுவதால் இந்த நீர் மட்டம் விரைவில் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலையில் ஆனைக்குட்டம் அணையிலிருந்து விருதுநகருக்கு தினசரி 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.
கருவேல மரங்கள்
ஆனைக்குட்டம் அணை நீர்பிடிப்பு பகுதியில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு் நீர்நிலைகளில் உள்ள கருவேலமர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அதற்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் அணைப்பகுதியில் நீர் பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் இன்னும் அகற்றப்படாதநிலை நீடிக்கிறது.
பாதிப்பு
ஏற்கனவே இதுகுறித்து பலமுறை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் பொதுப்பணித்துறையினர் பாராமுகமாகவே உள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதியில் கருவேல மரங்கள் நிறைந்து உள்ளதால் நீரை தேக்கிவைப்பதிலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் ஐகோர்ட்டு உத்தரவுபடி ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் உள்ள கருவேல மர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் இது குறித்து ஆய்வு செய்து பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டியதும் அவசியமாகும்.
Related Tags :
Next Story