2 ஆயிரத்து 751 பேர் வேட்புமனு தாக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 ஆயிரத்து 751 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கு கடந்த 28-ந்தேதி தொடங்கி நேற்று வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் நேற்று முன்தினம் வரை 1,172 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று கடைசிநாள் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதையொட்டி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் குவிந்தனர். மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாநகராட்சியில் 153 பேரும், 3 நகராட்சிகளில் 310 பேரும், 23 பேரூராட்சிகளில் 1,116 பேரும் என மொத்தம்1,579 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன்மூலம் இதுவரை திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கு 338 பேரும், 3 நகராட்சிகளில் உள்ள 75 வார்டுகளுக்கு 511 பேரும், 23 பேரூராட்சிகளில் உள்ள 363 வார்டுகளுக்கு 1,902 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். அந்த வகையில் 486 பதவிகளுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 751பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேட்புமனுக்கள் இன்று (சனிக்கிழமை) பரிசீலனை செய்யப்படுகின்றன.
Related Tags :
Next Story