ஆபாச வீடியோ வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி குற்றமற்றவர்- பெங்களூரு கோர்ட்டில் எஸ்.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல்


ஆபாச வீடியோ வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி குற்றமற்றவர்- பெங்களூரு கோர்ட்டில் எஸ்.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 5 Feb 2022 2:11 AM IST (Updated: 5 Feb 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோ வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி குற்றமற்றவர் என்று பெங்களூரு கோர்ட்டில் எஸ்.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

பெங்களூரு:

ஆபாச வீடியோ வழக்கு

  முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த ஆண்டு (2021) மார்ச் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இதுதொடா்பாக பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுபோல், ரமேஷ் ஜார்கிகோளி கொடுத்த புகாரின் பேரில் இளம்பெண் மீது சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

  இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்த அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டது. அதன்பேரில், சிறப்பு விசாரணை குழு போலீசார், ரமேஷ் ஜார்கிகோளி மீதான ஆபாச வீடியோ வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தயாராக உள்ளனர்.

நீதிபதி உத்தரவு

  இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரிக்க தடை விதிக்கும்படியும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகளும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகள் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

  இந்த வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி மீது பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த இடைக்கால தடையை ரத்து ெசய்ய வேண்டும் என்று சிறப்பு விசாரணை குழு தரப்பு வக்கீல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு விசாரணை குழு போலீசார், கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளித்து நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உத்தரவிட்டார்.

ரமேஷ் ஜார்கிகோளி குற்றமற்றவர்

  ஏற்கனவே ரமேஷ் ஜார்கிகோளி இந்த வழக்கில் குற்றமற்றவர் என்று குற்றப்பத்திரிகையில் சிறப்பு விசாரணை குழு போலீசார் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சிறப்பு விசாரணை குழு போலீசார் நேற்று பெங்களூரு 1-வது மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக ‘பி’ அறிக்கை தாக்கல் செய்தனர். அதாவது, ஆபாச வீடியோ வழக்கில் ரமேஷ் ஜார்கிகோளி குற்றமற்றவர் என்று பெங்களூரு கோர்ட்டில் சிறப்பு விசாரணை குழு போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

  அந்த அறிக்கையில், இளம்பெண் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இளம்ெபண் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

  ஆபாச வீடியோ வழக்கில் சிக்கி ரமேஷ் ஜார்கிகோளி மந்திரி பதவியை இழந்தார். தற்போது அவர் குற்றமற்றவர் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் மந்திரி பதவியை பெறும் முயற்சியில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

Next Story