ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை மீண்டும் தொடங்கப்படும் - டி.கே.சிவக்குமார் தகவல்
காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை மீண்டும் தொடங்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
காலஅவகாசம்
கர்நாடக காங்கிரஸ் சார்பில் டிஜிட்டல் முறையில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பயிற்சி நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு அந்த பயிற்சி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கட்சி நிர்வாகிகள் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். யார் எத்தனை உறுப்பினர்களை சேர்க்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இந்த பணியை கவனிக்க மாவட்டங்களுக்கு தலா ஒரு பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உறுப்பினர் சேர்க்கைக்கு இன்னும் 45 நாட்கள் காலஅவகாசம் உள்ளது.
காங்கிரஸ் வரலாறு
வீடு வீடாக சென்று இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 10 ரூபாய் கொடுப்பவர்களுக்கு நல்ல உறுப்பினர் அட்டை வழங்கப்படும். நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததே காங்கிரஸ் தான். இது காங்கிரஸ் வரலாறு. இந்த கட்சியின் உறுப்பினர் ஆவதே ஒரு பாக்கியம்.
நாடு தற்போது நெருக்கடியில் உள்ளது. இதை நாம் காக்க வேண்டும். அதிக உறுப்பினர்களை சேர்த்து காங்கிரசின் பலத்தை அதிகரிக்க வேண்டும். அதிகளவில் பெண் உறுப்பினர்களை சேர்க்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். காங்கிரசில் கோஷ்டி அரசியலுக்கு இடம் இல்லை. உறுப்பினராவது அனைவரின் உரிமை. புதிதாக சேரும் உறுப்பினர்களின் எண் வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்படும். கட்சியின் நிகழ்வுகள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பங்கேற்க வாய்ப்பு
மேகதாது பாதயாத்திரையில் பலர் கலந்து கொண்டனர். சிலருக்கு இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் வாபஸ் பெற்ற பிறகு காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை மீண்டும் தொடங்கும். எங்கு பாதயாத்திரை நிறுத்தினோமோ அங்கிருந்து இந்த பாதயாத்திரை தொடங்கப்படும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story