ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 10 ஏக்கர் நிலம் மீட்பு


ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 10 ஏக்கர் நிலம் மீட்பு
x
தினத்தந்தி 5 Feb 2022 2:50 AM IST (Updated: 5 Feb 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை நீர்வள ஆதாரத் துறையினர் மீட்டனர்.

அம்மாப்பேட்டை;
தஞ்சை அருகே ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை நீர்வள ஆதாரத் துறையினர் மீட்டனர்.
நீர்வளம்
ஒரு நாட்டின் வளத்திற்கு ஆதாரமாக விளங்குவது நீர்வளம். ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவை நமக்கு நீர் வளத்தைத் தருகின்றன.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணாமல் போய்விட்டன. அதன் விளைவே இன்று தமிழகம் மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஆக்கிரமிப்பு
இதனால் ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். நீதிமன்றங்களும் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் பல ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதேபோல் அம்மாபேட்டை அருகே புளியகுடி கிராமத்தில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிக்கப்பட்டு ஏரியாகும். இந்த ஏரி அப்பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்கவும், பாசனத்துக்கும் பயன்பட்டு வந்தது.
இதன் மூலம் புளியகுடி, கருப்பமுதலியார்கோட்டை கிராமத்தினர் பெரிதும் பயன்பட்டு வந்தனர். இந்தநிலையில் ஏரிக்குள் கருப்பமுதலியார் கோட்டை கிராமத்தை சேர்ந்த 16 பேர் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை ஆக்கிரமித்து, அதில் நெல், கடலை, எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.
கோரிக்கை
ஏரிக்குள் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நீர்வள ஆதாரத்துறையின் வெண்ணாறு கோட்ட பிரிவு கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன், உதவி பொறியாளர் மணிவண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், வருவாய்த்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன் இடத்தை அளவீடு செய்து எல்லைக்கல் நட்டனர்.
அகற்றம்
தொடர்ந்து நேற்று பொக்லின் எந்திரம் மூலம் ஏரிக்குள் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஏரிக்குள் சாகுபடி செய்ய ஏதுவாக விவசாயிகள் வரப்புகளை அமைத்திருந்தனர். அந்த வரப்புகளையும், ஆக்கிரமிப்புகளையும் பொக்லின் எந்திரம் மூலம் நீர்வள ஆதாரத்துறையினர் நேற்று அகற்றினர்.

Next Story