தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தனித்து போட்டி
குழித்துறை, கொல்லங்கோடு, பத்மநாபபுரம் நகராட்சிகளில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தனித்து போட்டியிடுகிறது. அங்கு 5 முனை போட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
குழித்துறை, கொல்லங்கோடு, பத்மநாபபுரம் நகராட்சிகளில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தனித்து போட்டியிடுகிறது. அங்கு 5 முனை போட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. கூட்டணி
தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
அதே கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் ஒன்றாக சேர்ந்து சந்திக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எழுந்த பிரச்சினையால் ஒரு சில மாவட்டங்களில் இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தனித்து போட்டி
அதேபோல் குமரி மாவட்டத்தில் குழித்துறை, கொல்லங்கோடு, பத்மநாபபுரம் ஆகிய 3 நகராட்சிகளில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளன.
அதன்படி 3 கட்சிகளை சேர்ந்தவர்களும் வார்டுகளில் போட்டியிட தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே குமரி மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தது. அவர்கள் கூறியபடி கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக அனைத்து வார்டுகளிலும் வேட்பு மனுதாக்கலும் செய்யப்பட்டுள்ளது.
நகராட்சிகள் விவரம்
புதிதாக உருவாக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., பா.ஜ.க. என அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. 5 முனை போட்டி நிலவுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கும் 5 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாக களத்தில் இறங்கி உள்ளன.
இதேபோல் பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க. 18 வார்டுகளில் வேட்புமனுதாக்கல் செய்துள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இங்கும் 5 முனை போட்டி நிலவுகிறது.
சமரச பேச்சுவார்த்தை
வேட்பு மனுதாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த மனுவை வாபஸ் பெற வருகிற 7-ந் தேதி கடைசி நாளாகும். இதற்கிடையே தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே சமரச பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. ஆனால், இதில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். அதே சமயத்தில் மாநில கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதால், தி.மு.க. கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்து போட்டியிடும் சூழல் உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது.
எனவே 3 நகராட்சிகளிலும் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு தனித்தனியாக தேர்தலை சந்திக்க போகிறதா? அல்லது ஒன்று சேர்ந்து போட்டியிட போகிறதா? என்ற முடிவு வருகிற 7-ந் தேதிக்குள் தெரிந்து விடும்.
Related Tags :
Next Story