வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணியில் 1600 போலீசார்
வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வேலூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. 22-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பதிவான வாக்குகள் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, தேர்தல் பார்வையாளர் பிரதாப், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், இளநிலை பொறியாளர் சீனிவாசன், பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் நிருபர்களிடம் டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறியதாவது:-
வாக்கு எண்ணும் மையத்தை முதற்கட்டமாக பார்வையிட்டு ஆய்வு செய்தோம். மைய கட்டிடத்தின் தரைதளத்தில் 1 மற்றும் 2-ம் மண்டலத்தில் பதிவான வாக்குகளும், முதல் தளத்தில் 3 மற்றும் 4 ஆகிய மண்டலத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.
அதன்படி தரைதளத்தில் 30 வார்டுகளுக்கும், முதல் தளத்தில் 30 வார்டுகளுக்கும் என மொத்தம் 60 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு கேமராக்கள்
வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஏஜெண்டுகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வருவதற்கு ஒரு வழியும், வெளியே செல்வதற்கு ஒரு வழியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 800 போலீசார் மற்றும் கண்காணிப்பு பணி என மொத்தம் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் வாக்கு எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் கூறுகையில், 13 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுமார் 17 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படும் என்றனர்.
Related Tags :
Next Story