பறக்கும் படை குழுக்களை கண்காணிக்க வேண்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
பறக்கும் படை குழுக்களை கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பறக்கும்படை குழுக்கள் பணிபுரிவதை கண்காணித்தல், தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடித்தல், பறிமுதல் செய்யப்படும் தொகை மற்றும் பொருட்கள் குறித்து தினசரி அறிக்கை அனுப்புதல் போன்ற பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்யவேண்டும். பெறப்பட்ட வேட்பு மனுக்கள், ஏற்கப்பட்ட மனுக்கள், சின்னங்கள் ஒதுக்கீடு, போட்டியிடும் இறுதி வேட்பாளர்களை முடிவு செய்து படிவம்-9-ல் அறிக்கை அனுப்பிட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் தேர்தல் முகவர்களுக்கு உரிய படிவத்தில் ஆணை வழங்க வேண்டும்.
மாதிரி கையொப்பம்
போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முதன்மை முகவர்களிடம் இருந்து மாதிரி கையொப்பம் பெறப்பட வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடித்து 100 சதவீதம் சரிபார்த்தல், உரிய போலீஸ் பாதுகாப்போடு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் சின்னம், பெயர் பொருத்தும் பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு தேவையான அனைத்து படிவங்கள், உறைகள், எழுதுபொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தங்கராஜ் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story