மகன் இறந்த அதிர்ச்சியில் 90 வயது மூதாட்டி சாவு
மகன் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த 90 வயது மூதாட்டியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை
மகன் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த 90 வயது மூதாட்டியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பம்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பக்கிரிதக்கா முனியன்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (வயது 90).
இவரது கணவர் பெரியதம்பி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
கணவர் இறந்த பிறகு ஜானகி தன் பிள்ளைகளை பெரும் சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கினார். தற்போது அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
மூத்த மகன் கண்ணன் (55), விவசாயம் செய்து வந்தார். கண்ணன் மீது அதிக பாசம் கொண்டு ஜானகி அவருடன் ஒன்றாக வசித்து வந்தார்.
இறப்பு
விவசாயி கண்ணன் கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் கண்ணன் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, தாய் ஜானகிக்கு மகன் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைகேட்டதும் அதிர்ச்சியடைந்து கதறிய ஜானகி, திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப முயன்றபோது ஜானகி இறந்து கிடந்தார்.
சோகம்
ஜானகி 90 வயதானாலும் 100 வயதை கடந்து வாழும் திடகாத்திரத்துடன் இருந்தார். இந்த நிலையில் மகன் இறந்த தகவலால் அவர் இறந்தது உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து, இருவரின் உடலுக்கு ஊர் பொதுமக்கள் இன்று மாலை இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story