திருப்பூரில் பஸ் நிறுத்தங்களை கடந்து நிறுத்தப்படும் பஸ்களால் பயணிகள், மாணவ-மாணவிகள் அவதி


திருப்பூரில்  பஸ் நிறுத்தங்களை கடந்து நிறுத்தப்படும் பஸ்களால் பயணிகள், மாணவ-மாணவிகள் அவதி
x
தினத்தந்தி 5 Feb 2022 9:36 PM IST (Updated: 5 Feb 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பஸ் நிறுத்தங்களை கடந்து நிறுத்தப்படும் பஸ்களால் பயணிகள் மாணவமாணவிகள் அவதி

திருப்பூர், 
திருப்பூரில்  பஸ் நிறுத்தங்களை கடந்து நிறுத்தப்படும் பஸ்களால் பயணிகள், மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பஸ்களில் இலவச பயணம்
மக்களின் அடிப்படை பொருளாதாரத்தை நிர்ணயிப்பது போக்குவரத்து. துரித போக்குவரத்து உள்ள நகரங்களில் மக்களின் வாழ்க்கை தரம் ஓரளவு மேம்பட்டிருக்கும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பெட்ரோல், டீசல் உயர்வால் நீண்ட தூரத்திற்கு இருசக்க வாகனங்களில் செல்வது எரிபொருள் செலவை அதிகரிக்க செய்கிறது. எனவே மக்களின் சேவையே பிரதானமாக கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து இயக்கப்படுகிறது. அதுவும் பெண்களின் வாழ்க்தை தரத்தை மேம்படுத்த டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்து அதன்படி பெண்கள் இலவசமாக டவுன் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். 
நீண்ட தூரம் செல்ல அரசு பஸ்சை பயன்படுத்துகிறார்கள். 
திருப்பூர் மாநகரை பொறுத்தவரை அரசு பஸ்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொலை தூர பயணம் செல்பவர்கள் மட்டுமின்றி உள்ளூர்களுக்குள்பயணிப்பவர்களும் அரசு பஸ்சை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் மட்டுமின்றி மாணவ-மாணவிகளும் அதிகளவில் அரசு பஸ்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதிலும் நகர அரசு பஸ்களில் மகளிர் பயணம் செய்ய இலவசம் என தமிழக அரசு அறிவித்ததில் இருந்து அரசு பஸ்சுக்காக காத்திருந்து பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
பஸ் நிறுத்தங்கள்
ஆனால் அரசு பஸ்களை குறிப்பிட்ட பஸ் நிறுத்தங்களில் நிறுத்தாமல், பஸ் நிறுத்ததில் இருந்து சற்று தொலைவில் நிறுத்துவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் வயதானவர்கள், பெண்கள் ஓடிச்சென்று பஸ்சில் ஏற வேண்டி உள்ளது. அப்போது கால் தவறி கீழே விழும் பரிதாப சம்பவமும் நடக்கிறது. அதேபோல், பள்ளி, கல்லூரி அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களில் மாணவ-மாணவிகளை முறையாக அரசு பஸ்களை ஏற்றாமல், பஸ் நிறுத்தத்தில் இருந்து வெகு தொலைவில் பஸ்களை நிறுத்திவிட்டு, பயணிகளை இறக்கி மட்டும் விட்டு விட்டு செல்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, சாலையில் வாகன போக்குவரத்து ஏற்டுவதும், இதனால் பிற வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதும் தொடர்கதையாக உள்ளது.
கோரிக்கை 
பழைய பஸ் நிலைய பாலத்தின் கீழ் பகுதியில்  ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதை கண்டுகொள்ளாமல் பஸ்கள் செல்வதும், குமரன் சிலை பகுதியில் ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளின் வசதிக்காக பஸ் அனைத்தும் பெரியார், அண்ணா சிலையை சுற்றி வர வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டும் அது நடைமுறை படுத்தப்படாமல் உள்ளது.
அதுமட்டுமின்றி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தாலும், அந்த இடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்காமல், சாலையின் நடுவே பயணிகளை ஏற்றி இறக்கும் நிலை தொடர்கதையாக உள்ளது.
இதேபோல், தென்னம்பாளையம், கோட்டை மாரியம்மன் கோவில், குமரன் ரோடு, புஷ்பா ரவுண்டானா, எம்.ஜி.ஆர்.சிலை, குமார் நகர் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள் போக்குவரத்து சிக்னல்களுக்கு அருகில் உள்ளதால், அங்கு முறையற்ற வகையில் அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர்.  எனவே அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஓட்டுனர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்றனா்.

Next Story