தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 228 வேட்பு மனுக்கள் ஏற்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 228 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
தூத்துக்குடி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 228 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய 3 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் உள்ள 414 வார்டு உறுப்பினர்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 276 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாநகராட்சியில் மட்டும் 480 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
பரிசீலனை
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாவட்டத்தில் 22 இடங்களில் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. காலை முதல் ஒவ்வொரு வார்டாக வேட்பாளர்கள் அழைக்கப்பட்டனர். பின்னர் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அந்த மனுக்கள் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளதா என்று கேட்கப்பட்டது.
அப்போது 59-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மகன் எஸ்.பி.எஸ்.ராஜாவுக்கு மாநகராட்சி பகுதியில் ஓட்டு இல்லை என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான ஆவணங்களை வேட்பாளர் தரப்பில் சமர்ப்பித்ததால், அவரது மனு ஏற்கப்பட்டது. அதே போன்று 60-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் பாலகுருசாமி, மாநகராட்சியில் வக்கீலாக இருப்பதாகவும், அந்த பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் அ.தி.மு.க.வினர் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரன், தி.மு.க. வேட்பாளரின் மனுவை ஏற்காமல் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தி நிறுத்தி வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்பு
17-வது வார்டு மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் திருமணிக்கு மாநகராட்சி பகுதியில் ஓட்டு இல்லை. இதனால் அதற்கு உரிய ஆவணத்தை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, அவரது வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. மாலையில் 60-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் பாலகுருசாமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் திருமணியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுதவிர 4 வேட்பாளர்கள் 2 மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த 4 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதம் உள்ள 475 மனுக்கள் ஏற்கப்பட்டன.
நகராட்சி- பேரூராட்சி
இதே போன்று நகராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட 542 மனுக்களில் 13
மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற 529 மனுக்கள் ஏற்கப்பட்டன.
பேரூராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட 1,254 மனுக்களில் 30 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற 1224 மனுக்கள் ஏற்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 276 மனுக்களில் 48 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதம் உள்ள 2 ஆயிரத்து 228 மனுக்கள் ஏற்கப்பட்டன.
பாதுகாப்பு
வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story