தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 Feb 2022 10:56 PM IST (Updated: 5 Feb 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூா், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

சுகாதார சீர்கேடு
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி தைக்கால் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால் பொதுமக்கள் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குவிந்துகிடக்கும் குப்பைகளால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், புதிதாக குப்பை தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-தைக்கால் கிராமமக்கள், நாகை.
ஆபத்தான குடிநீர்த்தேக்க தொட்டி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் ஒளிமதி கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த தொட்டி அருகில் கோவில், பள்ளிக்கூடம், ஊராட்சி கட்டிடம், நியாய விலைக்கடை மற்றும் அங்கன்வாடி (குழந்தைகள்) கட்டிடம் ஆகியவை உள்ளன. இந்த தொட்டி அருகே செல்பவர்கள் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் உள்ளனர். எனவே உயிர்சேதம் ஏற்படும் முன்பு ஆபத்தான குடிநீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய குடிநீர்த்தேக்க தொட்டி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளவரசன், ஒளிமதி கிராமம்.
நூலகம் வேண்டும்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுர் தாலுகா வடபாதிமங்கலம் கிராமத்தில் நூலகம் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். வடபாதிமங்கலம் கிராமத்தை சுற்றி பல்வேறு ஊர்கள் உள்ளன. இதனால் மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு படிப்பதில் மிகவும் சிரமம் உள்ளது. இந்த மாணவ-மாணவிகள் படிக்க வேண்டுமென்றால் திருவாரூர், கூத்த மங்கலம் போன்ற நூலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடபாதிமங்கலம் கிராமத்தில் முழு நேர நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், வடபாதிமங்கலம்.
குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்த ஆய்க்குடி பகுதி கொல்லகண்டம் முதல் தெருவில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் குழாய் பராமரிப்பின்றி தற்போது உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், குடிநீர் குழாயை சுற்றி போடப்பட்டிருந்த சிமெண்டு காரைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி குடிநீர் குழாய் இருக்கும் பகுதியை சுற்றி கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கொரடாச்சேரி.




Next Story