கரூர் மாவட்டத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 Feb 2022 10:56 PM IST (Updated: 5 Feb 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

கரூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வேட்புமனுதாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி, நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. 7-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய 3 நகராட்சிகள், புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மருதூர், நங்கவரம், புஞ்சை தோட்டக்குறிச்சி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
1,328 வேட்புமனுக்கள்
இப்பகுதிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட கரூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகம், நகராட்சி ஆணையர்கள் அலுவலகம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்தனர். இதில்
கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியில் 348 பேரும், குளித்தலை நகராட்சியில் 142 பேரும், பள்ளப்பட்டி நகராட்சியில் 124 பேரும், புகளூர் நகராட்சியில் 125 பேரும், புலியூர் பேரூராட்சியில் 63 பேரும், அரவக்குறிச்சி பேரூராட்சியில் 83 பேரும், மருதூர் பேரூராட்சியில் 108 பேரும், நங்கவரம் பேரூராட்சியில் 90 பேரும், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 66 பேரும், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் 54 பேரும், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 71 பேரும், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் 54 பேரும் என மொத்தம் 1,328 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர்.
பாதுகாப்பு பணி
இந்நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதனையொட்டி கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் குவிந்தனர். இதனால் வார்டு வாரியாக பிரித்து 6 அறைகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதனையொட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் ஆகிய 3 நகராட்சிகளில் மொத்தம் 391 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 4 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 387 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோல் புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மருதூர், நங்கவரம், புஞ்சை தோட்டக்குறிச்சி, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய 8 பேரூராட்சிகளில் மொத்தம் 589 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 11 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 578 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வைப்புத்தொகை
கரூர் மாநகராட்சி 38-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளராக சீதா என்பவர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற போது, பா.ஜ.க. வேட்பாளர் சீதா வைப்புத்தொகையாக ரூ.4 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.2 ஆயிரம் மட்டும் செலுத்தி ரசீது வைத்துள்ளார். இதனால் அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள ரூ.2 ஆயிரத்தை நேற்று செலுத்தி ரசீதை சீதா பெற்றார். தொடர்ந்து அவரது வேட்புமனு பரிசீலனையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீதா மற்றும் பா.ஜ.க.வினர் தேர்தல் அதிகாரியை சந்தித்து, வைப்புத்தொகை செலுத்தி விட்டதாக கோரிக்கை மனு அளித்தனர். அவரது வேட்புமனு பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.

Next Story