விழுப்புரம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 1,247 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு; 50 மனுக்கள் நிராகரிப்பு
விழுப்புரம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 1,247 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 50 மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதில் 3 நகராட்சிகளின் 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 707 பேரும், 7 பேரூராட்சிகளின் 108 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 594 பேரும் ஆக மொத்தம் 210 பதவியிடங்களுக்கு 1,301 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று தேர்தல் நடத்தும் அலுவலகங்களான அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்றது. நகராட்சி, பேரூராட்சிகளின் ஒவ்வொரு வார்டு வாரியாக இந்த பணிகள் நடைபெற்றன. இதற்காக வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் என யாராவது ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களின் முன்னிலையில் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
1,247 பேரின் மனுக்கள் ஏற்பு
இதன் முடிவில் 3 நகராட்சிகளின் 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 707 பேரின் வேட்பு மனுக்களில் 27 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 680 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதேபோல் 7 பேரூராட்சிகளின் 108 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 594 பேரின் வேட்பு மனுக்களில் 23 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 4 பேர் தாங்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர். மீதமுள்ள 567 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
மொத்தத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 210 பதவியிடங்களுக்கு 1,301 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 1,247 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 50 மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டன. 4 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். மேலும் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். அதன் பிறகு நாளை மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
Related Tags :
Next Story