வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி குமரி வந்தது
சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி நேற்று கன்னியாகுமரி வந்தது. இந்த ஊர்திக்கு 2 இடங்களில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
சென்னை குடியரசு தினவிழாவில் பங்கேற்ற வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி நேற்று கன்னியாகுமரி வந்தது. இந்த ஊர்திக்கு 2 இடங்களில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அலங்கார ஊர்தி
தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அரசு சார்பில் 3 அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்றது. அதில் ஒன்றான வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி நேற்று குமரி மாவட்டத்திற்கு வந்தது.
அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் பஞ்சலிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மகாதானபுரம் சந்திப்புக்கு வந்த ஊர்தியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மலர் தூவி வரவேற்றார். ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட மேளதாளங்களுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மலர்தூவி வரவேற்பு
நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் அழகேசன், அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை குழுத்தலைவர் தாமரைபாரதி, அரசு குற்றவியல் வக்கீல் மதியழகன், குலசேகரம் ஊராட்சி தலைவர் சுடலையாண்டி உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை தொடர்ந்து கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
நினைவு பரிசுகள்
மேலும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்றை விளக்கும் விதமாக மாணவியர்களின் பரத நாட்டியம், குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவர், வேலுநாச்சியார் போன்று வேடம் அணிந்து வீரசாகசம் நிகழ்த்திய காட்சி மற்றும் முரசு கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி ஆகியவையும் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அதோடு இந்த அலங்கார ஊர்தியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குனர் (மண்டல அலுவலர்) அண்ணா, கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு தங்கவேல், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) லெனின் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த அலங்கார ஊர்தி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) காந்தி நினைவு மண்டபம் முன்பு காட்சிபடுத்தப்பட்டிருக்கும். இதனை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.
Related Tags :
Next Story