அ.தி.மு.க. வேட்பாளரின் மனு நிராகரிப்பு:ஆணையாளரை சிறைபிடித்து கட்சியினர் கடும் வாக்குவாதம்
ராமநாதபுரம் நகராட்சியில் 7-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சோமசுந்தரபாண்டியனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை தொடர்ந்து தி.மு.க.வினரும் திரண்டு வந்ததால் ஆணையாளரை சிறைபிடித்ததோடு அங்கு மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. நகராட்சி அலுவலக கண்ணாடி உடைந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகராட்சியில் 7-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சோமசுந்தரபாண்டியனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை தொடர்ந்து தி.மு.க.வினரும் திரண்டு வந்ததால் ஆணையாளரை சிறைபிடித்ததோடு அங்கு மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. நகராட்சி அலுவலக கண்ணாடி உடைந்தது.
அ.தி.மு.க. வேட்பு மனு நிராகரிப்பு
ராமநாதபுரம் நகராட்சி தேர்தலையொட்டி 33 வார்டுகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று காலை ஆணையாளரும் தேர்தல் அலுவலருமான சந்திரா தலைமையில் நடைபெற்றது. இந்த பரிசீலனையின்போது அ.தி.மு.க. வேட்பாளர் சோமசுந்தரபாண்டியன் என்பவரின் வேட்பு மனு உறுதி மொழி ஆவணத்தில் 7-வது வார்டு வாக்காளர் பட்டியலில் இருப்பதற்கு பதில் 8-வது வார்டு வாக்காளர் பட்டியலில் இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்த அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர்கள் சாமிநாதன், ரெத்தினம், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மாவட்ட தகவல் தொழில் நுட்ப செயலாளர் சரவணக்குமார், முன்னாள் அரசு வக்கீல் கருணாகரன், நகர் செயலாளர் அங்குச்சாமி, மண்டபம் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆணையாளர் சந்திராவின் அலுவலகத்திற்குள் நுழைந்து முற்றுகையிட்டு சட்டபிரிவுகளை சுட்டிக்காட்டி மனுவை ஏற்குமாறு கோரினர். அதேநேரத்தில், தி.மு.க.வினரும் அங்கு குவிந்து மனுவை பரிசீலனை செய்யாமல் உரிய காரணம் இருப்பதால் நிராகரிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
போலீசார் குவிப்பு
இதனால் தேர்தல் அலுவலரின் அறைக்குள்ளும், வெளியிலும் நூற்றுக்கணக்கானோர் திரளாக குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் நகரசபை ஆணையாளர் அலுவலக கண்ணாடி கதவு உடைந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் இருகட்சியினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையும் மீறி கூட்டத்தினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு நகராட்சி ஆணையாளர் அறையை விட்டு வெளியேறாமல் அனைத்து அலுவலர்களும் வெளியேற முடியாமல் சிறைபிடித்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. இதன்பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தினர் வெளியேற்றப்பட்டனர்.
கலைந்து சென்றனர்
இதுபற்றி அறிந்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க.பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், நகர் செயலாளர்கள் பிரவீன் தங்கம், கார்மேகம், ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகரன், அகமது தம்பி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் திரளாக கூடி உரிய காரணங்கள் இருப்பதால் சட்ட விதிகளின்படி மனுவை நிராகரிக்குமாறு ஆணையாளரிடம் வலியுறுத்தி கூறினர்.அங்கு பெரும் கூட்டமாக திரண்டிருந்த தி.மு.க.வினரை காதர்பாட்சா முத்துராமலிங்கம் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு எச்சரித்து வெளியேற்றினார். இதனை தொடர்ந்து 2 வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அவர்களது வக்கீல்களின் வாதத்திற்கு பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர் சோமசுந்தரபாண்டியனின் மனுவை நிராகரிப்பதாக தேர்தல் அலுவலர் ஆணையாளர் சந்திரா அறிவித்தார். இதன்பின்னர் கூட்டத்தினர் கலைந்துசென்றனர்.
Related Tags :
Next Story