சிஆர்பிஎப் வீரர் உள்பட 2 பேர் வீடுகளில் திருட்டு


சிஆர்பிஎப் வீரர் உள்பட 2 பேர் வீடுகளில் திருட்டு
x
தினத்தந்தி 6 Feb 2022 12:16 AM IST (Updated: 6 Feb 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டாவில் சி.ஆர்.பி.எப். வீரர் உள்பட 2 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அணைக்கட்டு

பள்ளிகொண்டாவில் சி.ஆர்.பி.எப். வீரர் உள்பட 2 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

 சி.ஆர்.பி.எப். வீரர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா ரங்கநாதர் நகரில் வசித்து வருபவர் கருணாகரன். இவரது மகன் மார்க்கபந்து, சி.ஆர்.பி.எப். வீரராக உள்ளார். தற்போது காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். 

பள்ளிகொண்டாவில் உள்ள வீட்டில் அவரது மனைவி விஜயலட்சுமி வசித்து வருகிறார். முதல் தளத்தில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவர் குடியிருக்கிறார். இவர், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டை பூட்டி விட்டு சின்னசேரி கிராமத்தில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அதேபோல் மணிகண்டனும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளளார்.

 நகை-பணம் திருட்டு

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் விஜயலட்சுமியின் வீட்டில் 2 வெள்ளி காசுகள், 2 வெள்ளி காமாட்சி விளக்குகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும், மணிகண்டன் வீட்டில் கம்மல், ஜிமிக்கி, மோதிரம் மற்றும் 3 பவுன் நகைகளை திருடிவிட்டு சென்றுள்ளனர்.

மாலை 6 மணிக்கு விஜயலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் அவரவர் வீடுகளுக்கு திரும்பிய போது 2 பேர் வீட்டிலும் நகை, பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், விக்னேஷ், சிங்காரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 

கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து பீரோவில் பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story