வேலூர் மாநகராட்சி 24வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் மனு தள்ளுபடிஅதிகாரியின் ஜீப் முற்றுகை


வேலூர் மாநகராட்சி 24வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் மனு தள்ளுபடிஅதிகாரியின் ஜீப் முற்றுகை
x
தினத்தந்தி 6 Feb 2022 12:31 AM IST (Updated: 6 Feb 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் வினோத்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிகாரியின் ஜீப்பை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்
வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் வினோத்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிகாரியின் ஜீப்பை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

24-வது வார்டு

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட 24 -வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில்  சி.கே.எஸ்.வினோத்குமார், தி.மு.க. சார்பில் சுதாகர் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. 

அப்போது அ.தி.மு.க., வேட்பாளர் வினோத்குமார் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறி தி.மு.க., வேட்பாளர் சுதாகர், ஒரு மனு கொடுத்தார். அதில், வினோத்குமார் ஒப்பந்ததாரர் பணி எடுத்து செய்கின்றார் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. மாலை பரிசீலிக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் குவிந்தனர்

இது குறித்து தகவலறிந்த அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பொருளாளர் எம்.மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ.பி.சதீஷ்குமார், முன்னாள் தொகுதி செயலாளர் சி.கே.சிவாஜி உள்பட நிர்வாகிகள் 2-வது மண்டல அலுவலகத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேட்பாளர் வினோத்குமார் ஒப்பந்ததாரர் பணியை தான் செய்யவில்லை என்றும் தன்னுடைய தந்தைதான் செய்கிறார் என்றும் அதற்கான ஆவணங்களை கொண்டுவந்து காண்பித்தார். 
ஆனால் உதவித் தேர்தல் அலுவலர் வசந்தி 24-வது வார்டு வேட்புமனுவை மாலையில் பரிசீலிப்பதாக தெரிவித்தார். அதனால் அ.தி.மு.க., நிர்வாகிகள் அங்கேயே முகாமிட்டு இருந்தனர். மாலை 4 மணி வரை உதவி தேர்தல் அலுவலர், வேட்பாளர் வினோத்குமாரிடம் அவருடைய தந்தை சி.கே.சிவாஜியின் பெயரில் உள்ள ஒப்பந்த பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை கேட்டார். அந்த ஆவணங்களை உதவி தேர்தல் அதிகாரியிடம் வினோத்குமார் வழங்கினார்.

போலீசார் குவிப்பு
இதனிடையே அ.தி.மு.க.வினர் அதிக அளவில் கூடியதால் ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து மனு குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. மாலை 4.45 மணி வரை மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்று தெரிவிக்கப்படவில்லை. 
இந்த நிலையில் மாலை 4.50 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வசந்தி, இது தொடர்பாக மாநகராட்சி தேர்தல் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து, அங்கிருந்து ஜீப்பில் ஏறி புறப்பட ஆயத்தமானார்.

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க., வினர் அவரது ஜீப்பை முற்றுகையிட்டனர். முடிவு அறிவிக்கப்படாமல் எங்கும் செல்லக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும் வேட்பாளர் வினோத்குமார் உள்பட நிர்வாகிகள் 2-வது மண்டல அலுவலக நுழைவுவாயில் கேட் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் வந்து நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அது குறித்து உதவி தேர்தல் அலுவலர் வசந்தியிடம் கூறினார். 

வேட்பு மனு தள்ளுபடி

இதனை தொடர்ந்து 24-வது வார்டு தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்களை உதவி தேர்தல் அதிகாரி தன்னுடைய அறைக்கு அழைத்தார். அப்போது அ.தி.மு.க., வேட்பாளர் வினோத்குமாரின் மனுவை நிராகரிப்பதாக கூறி அவரை வெளியே அனுப்பி விட்டனர். அவர் காரணம் கேட்டதற்கு எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார்.
இந்த சம்பவத்தால் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story