புதுக்கோட்டை நகராட்சியில் 332 வேட்பு மனுக்கள் ஏற்பு; 2 மனுக்கள் தள்ளுபடி
புதுக்கோட்டை நகராட்சியில் 332 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. பா.ஜனதா வேட்பாளர் உள்பட 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
புதுக்கோட்டை,
உள்ளாட்சி தேர்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகளுக்கும், ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், கீரனூர், கீரமங்கலம், கறம்பக்குடி, பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளிலும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு வருகிற 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. மாவட்டத்தில் மொத்தம் 189 பதவிகளுக்கு 1,114 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை
புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 334 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்களில் வைத்து வார்டு வாரியாக மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்டன.
வேட்பு மனுக்கள் பரிசீலனை காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் ஒரே நேரத்தில் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், அவர்களது சார்பில் வந்தவர்கள் என நகராட்சி அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.
2 மனுக்கள் தள்ளுபடி
வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது தகுதியான மனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டன. புதுக்கோட்டை நகராட்சியில் 334 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 332 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதில் 35-வது வார்டில் பா.ஜனதா சார்பில் போட்டியிட மனுதாக்கல் செய்த வேட்பாளர் மஜித், மனுவை முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்காததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் 42-வது வார்டில் தாழ்த்தப்பட்டோருக்கான பொதுப்பிரிவு வார்டில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த ராமகிருஷ்ணன் என்பவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. அவர் சாதி சான்றிதழின் நகலை இணைக்காததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் தி.மு.க. பிரமுகர் எனவும், கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
இறுதி பட்டியல்
வேட்பு மனுவை திரும்ப பெற நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். வேட்பாளர் இறுதி பட்டியல் நாளை வெளியாகும். இதேபோல் சின்னங்களும் நாளை ஒதுக்கீடு செய்யப்படும்.
அறந்தாங்கி
அறந்தாங்கி நகராட்சியில் 27 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 148 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்புமனு மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இந்தநிலையில் ஒரே வார்டில் 2 வேட்பு மனு தாக்கல் செய்த 6-வது வார்டு முத்து (என்கிற) சுப்பிரமணியன் (தி.மு.க.), 12-வது வார்டு ராஜேந்திரன் (தி.மு.க.), 24-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ரேணுகா ஆகியோரது ஒரு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதேபோல் 25-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் சையத்தம்மாளை எதிர்த்து சர்மிளாபேகம் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவரது குற்றப்பின்னணி குறித்து மனுவில் பூர்த்தி செய்யவில்லை என சையத்தம்மாள் தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்தார். இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) காலை 9.55 மணிக்குள் இருதரப்பினரும் ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரத்தை தாக்கல் செய்யவில்லை என்றால் மேற்படி வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அறந்தாங்கி நகராட்சியில் 147 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ஒருவரது மனு பரிசீலனையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story