தாமிரபரணி பாசன குளங்களில் 28,831 பறவைகள் கணக்கெடுப்பு


தாமிரபரணி பாசன குளங்களில் 28,831 பறவைகள் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 6 Feb 2022 12:56 AM IST (Updated: 6 Feb 2022 12:56 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி பாசன குளங்களில் 69 வகைகளான 28 ஆயிரத்து 831 பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன.

நெல்லை:
தாமிரபரணி பாசன குளங்களில் 69 வகைகளான 28 ஆயிரத்து 831 பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன.

தாமிரபரணி பாசன குளங்கள்

அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வளம் காப்பு மையம், முத்துநகர் இயற்கை சங்கம், நெல்லை இயற்கை சங்கம், நெல்லை மண்டல வனத்துறை ஆகியவை இணைந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி பாசன குளங்களில் பறவைகளை கணக்கெடுக்கும் பணியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்ததன் காரணமாக அனைத்து குளங்களும் நிரம்பி வழிகின்றன. இதனால் குளங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் குவிந்துள்ளன.

பறவைகள் கணக்கெடுப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், வடக்கு கழுவூர், நெல்லை நயினார்குளம், பாளையங்கோட்டை வேய்ந்தான்குளம், தென்காசி மாவட்டம் வாகைகுளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுளம் போன்ற குளங்களில் உள்நாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் கூடுகட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உள்ளன.

இந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள், நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 2011-ம் ஆண்டு முதல் தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 65 குளங்களில் பறவைகளை கணக்கெடுக்க தன்னார்வலர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து சென்று கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பல்வேறு பறவைகள்

இந்த கணக்கெடுப்பில் 69 சிற்றினங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 831 பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 4,907 உன்னிக்கொக்கு, 1,752 வெள்ளை அரிவாள் மூக்கன், 1,574 சிறிய நீர்க்காகம், 1,567 கருப்பு கோட்டான், 1,480 சில்லி தாரா பறவை இனங்கள் பதிவானது.

வலசை வரும் பறவை இனங்களில் அதிகபட்சமாக 1,066 மீசை ஆலா, 845 நீலச்சிறகு வாத்து, 768 தைலான் குருவிகளும் பதிவானது. மேலும் நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, மஞ்சள் மூக்கு வாத்து, நாமக்கோழி, கானாங்கோழி, முக்குளிப்பான், தாழைக்கோழி போன்ற பறவைகள் குஞ்சுகளுடன் பெரும்பாலான இடங்களில் பதிவு செய்யப்பட்டன.

அழிவின் விளிம்பில்...

அருகி வரும் பறவை இனமான கருவால் மூக்கன் நெல்லை நயினார்குளத்தில் 300-ம், சுரண்டை குளத்தில் 46-ம் உள்ளது. இந்த பறவையானது சைபீரியாவில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மங்கோலியாவில் இருந்து வந்த வழிதலை வாத்து பறவையினம் விஜயநாராயணம் பகுதிகளில் உள்ள குளங்களில் காணப்பட்டது. அழிவின் விளிம்பில் இருக்கும் வெண்கழுத்து நாரை கோவில்பட்டி பகுதிகளிலும், களியன் வாத்து இனம் நெல்லை குப்பைகுறிச்சி பகுதியில் உள்ள குளங்களிலும் பதிவானது. இவைகள் ஐரோப்பா மற்றும் ஆர்டிக் பகுதிகளில் இருந்து வந்து இனப்பெருக்கம் செய்கின்றன.

தாமிரபரணி குளங்களில் அரிதாக காணப்படும் பெரிய சீழ்க்கை சிறகு பறவை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியில் பதிவானது. நெல்லை வேய்ந்தான்குளம் பகுதியில் 20 வகையான பறவைகள் காண முடிந்தது.
இந்த தகவலை அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வளம் காப்பு மையம் மற்றும் தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

Next Story