அறந்தாங்கி நகராட்சி கண்ணோட்டம்


அறந்தாங்கி நகராட்சி கண்ணோட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2022 1:09 AM IST (Updated: 6 Feb 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி உள்ளது. இந்த நகராட்சி 1977-ம் ஆண்டு நகராட்சியாக உதயமானது. இங்கு 27 வார்டுகள் உள்ளன.

அறந்தாங்கி நகராட்சி தலைவர்கள்
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 14 வார்டுகள் பெண்களுக்கும், 13 வார்டுகள் பொதுவார்டாகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. நகராட்சியில் 17 ஆயிரத்து 90 ஆண்களும், 18 ஆயிரத்து 601 பெண்களும், இதர 2 என மொத்தம் 35 ஆயிரத்து 693 வாக்காளர்கள் உள்ளனர். 27 வார்டுகளுக்கும் 13 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 39 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 27 வார்டுகளும் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அறந்தாங்கி நகராட்சியின் தலைவர்களாக தி.மு.க.வை சேர்ந்தவர்களே பதவி வகித்து உள்ளனர். கடந்த 1986-ம் ஆண்டு ஏ.பி.ஆர். ஜனார்த்தன், 1996-ம் ஆண்டு மீனாகுமாரி, 2001-ம் ஆண்டு சுகந்தம், 2006-ம் ஆண்டு மாரியப்பன், 2011-ம் ஆண்டு மீனாள் ஆகியோர் தலைவராக இருந்து உள்ளனர்.
தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அறந்தாங்கி நகராட்சியை கைப்பற்ற தி.மு.க.- அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
பஸ் நிலையம்
அறந்தாங்கி பஸ்நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. குறுகலான இடத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் பஸ்களை திருப்ப முடியாமல் டிரைவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். அறந்தாங்கியில் இருந்து வேலூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் போதிய இட வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.
பேராவூரணி சாலையில் செயல்பட்டு வரும் செவ்வாய் சந்தை மிகவும் பிரபலமானது. ஆனால் இங்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை. மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
பாதாள சாக்கடை திட்டம்
நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படவில்லை. நகர பகுதியில் உள்ள குளங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஒரு குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கு தண்ணீர் செல்ல வழி இல்லை. பூங்கா அமைக்க இடம் இருந்தும் பூங்கா அமைக்காமல் உள்ளது. நகரபகுதியில் மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்பதால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
நகராட்சி முழுவதும் எடுக்கப்படும் குப்பைகள் புதுக்கோட்டை சாலையில் ஒரு இடத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு குப்பை கொட்டும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

Next Story