நெல்லை மாவட்டத்தில் 2,126 வேட்புமனுக்கள் ஏற்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் 2,126 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் 2,126 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, அம்பாசமுத்திரம், களக்காடு, விக்கிரமசிங்கபுரம் ஆகிய 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நெல்லை மாநகராட்சி பகுதியில் பாளையங்கோட்டை மண்டல அலுவலகம், தச்சநல்லூர் மண்டல அலுவலகம், நெல்லை மண்டல அலுவலகம், மேலப்பாளையம் மண்டல அலுவலகம் ஆகிய 4 இடங்களில் நடந்தது.
நகராட்சிகளில் அந்தந்த அலுவலகத்திலும், பேரூராட்சியில் அந்த அலுவலகத்திலும் வேட்புமனுத்தாக்கல் நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.
இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, ம.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கு 540 பேரும், அம்பை, விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகளுக்கு 329 பேரும், 17 பேரூராட்சிகளுக்கு 1,357 பேரும் என மொத்தம் நெல்லை மாவட்டத்தில் 2,226 வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
பரிசீலனை
இந்த நிலையில் நேற்று அனைத்து வேட்புமனு பரிசீலனை அந்தந்த அலுவலகங்களில் நடந்தது. அப்போது வேட்பாளர்கள், தங்கள் வக்கீல்களை அழைத்துச்சென்றனர். வேட்புமனு பரிசீலனை செய்தபோது பல குற்றச்சாட்டுகள் ஆதாரங்களைச் சொல்லி எதிர்தரப்பினர் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அதற்கு தகுந்த ஆதாரம் இல்லை என்றால் அந்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சில மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
நெல்லை மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்களிலும் நேற்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. அப்போது வேட்பாளர்கள் தங்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் வரி செலுத்தவில்லை என்றும் என்.ஓ.சி. வழங்கவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்கள். இதைக் கேட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் கேட்டனர். அவர்கள் அதற்கு தகுந்த ஆதாரங்கள் கொடுத்ததையொட்டி பலருடைய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆதாரம் கொடுக்காதவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த மனுக்கள் பரிசீலனையையொட்டி 4 மண்டல அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் திரண்டு இருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2,126 மனுக்கள் ஏற்பு
நெல்லை மாநகராட்சி உள்ள 540 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் 469 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன நகராட்சிகளில் உள்ள 329 வேட்பு மனுக்களில் 323 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பேரூராட்சிகளில் உள்ள 1,357 வேட்பு மனுக்களில் 1,334 மனுக்கள் ஏற்கப்பட்டன. 23 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட 2,226 வேட்புமனுக்களில் 2,126 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 100 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
Related Tags :
Next Story