பேரையூர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை
பேரையூர் அருகே சாப்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரையூர்
பேரையூர் அருகே சாப்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கால் தடம்
மதுரை மாவட்டம் சாப்டூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து சாப்டூர் செல்வதற்காக பேரையூர்-சாப்டூர் சாலையில், அத்திபட்டி விலக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் 50 அடி தூரத்தில் சிறுத்தை நின்றுள்ளது. இதை பார்த்த மூர்த்தி உடனடியாக வடகரைபட்டி விலக்கில் உள்ள சாப்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று கூறியுள்ளார். இதையடுத்து வனத்துறை அதிகாரி செல்லமணி மற்றும் வனத்துறையினர் அத்திபட்டி விலக்கு அருகே கரும்பு காட்டுக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தையின் கால்தடம் இருந்தது. உடனே வனத்துறையினர் அந்த இடத்தை சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கரும்புக்காடு, அங்குள்ள கண்மாய் பகுதி ஆகிய இடங்களில் கேமரா பொருத்தி உள்ளனர். இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் தெரியவரும் என்று வனத்துறையினர் கூறினார்கள்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
இதுகுறித்து சாப்டூர் வனத்துறை அதிகாரி செல்லமணி கூறும்போது:-
பேரையூர்-சாப்டூர் சாலை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. ஆகையால் இப்பகுதியில் பொதுமக்கள் தனியாக இரவு நேரங்களில் செல்ல வேண்டாம்.
மேலும் இரவு நேரங்களில் விவசாய பணி செய்ய செல்வோர் உடன் ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டும்.
சிறுத்தையின் நடமாட்டம் தெரிந்தால், உடனடியாக பொதுமக்கள் சாப்டூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story