80 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி- சுகாதார துறையினர் தகவல்


80 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி- சுகாதார துறையினர் தகவல்
x
தினத்தந்தி 6 Feb 2022 2:12 AM IST (Updated: 6 Feb 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 80 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 80 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதலில் முன் களப் பணியாளர்களுக்கும், பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கும், இதைத்தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டாலும் லேசான அறிகுறிகளுடன் குணம் அடைந்து விடுகிறார்கள்.
இதையடுத்து 12 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது.
80 ஆயிரம் சிறுவர்கள்
அதன்படி கடந்த மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 பேர் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த பள்ளிக்கூடங்களிலேயே தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து சுகாதார துறையினர் மாணவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதால் கடந்த 1-ந்தேதி மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கூடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 79 ஆயிரத்து 982 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story